

சண்டிகார்
நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் சண்டிகார் இணைந்துள்ளது. இதன்படி, சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் 99.93 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
இதனை முன்னிட்டு, சண்டிகார் நிர்வாகத்தின் கல்வி துறை நிகழச்சி ஒன்றிற்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் பஞ்சாப் கவர்னர் மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான குலாப் சந்த் கட்டாரியா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
முதன்மை செயலாளர் ராஜேஷ் பிரசாத் கவுரவ விருந்தினராக பங்கேற்றார். இதில், அடிப்படை வாசித்தல், எழுதுதல் மற்றும் எண்ணற்ற கல்வி சார்ந்த திறன்களை சமீபத்தில் பெற்று தேர்ந்த, வயது முதிர்ந்தோரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சியானது நடந்தது.
அவர்கள் வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ் பயிற்சியை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கட்டாரியா, இது வரலாற்று சாதனைக்கான தருணம் என குறிப்பிட்டார்.
இதனால், நாட்டில் முழு அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் சண்டிகார் 6-வது இடமும், யூனியன் பிரதேசத்தில் 2-வது இடமும் பெற்றுள்ளது. இதேபோன்று சண்டிகாரில் பெண்களின் கல்வியறிவு விகிதமும் 99.89 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளது.