பாகிஸ்தானை பயங்கரவாதத்திலிருந்து ஒழிக்க அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

அகமதாபாத்தில் திறந்த வாகனத்தில் சென்றபடி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தார்.
அகமதாபாத்,
சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.அகமதாபாத்தில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அகமதாபாத்தில் திறந்த வாகனத்தில் சென்றபடி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே உற்சாகமாக சென்றார் பிரதமர் மோடி. வதோதராவில் பேரணியாக சென்ற பிரதமர் மோடியை கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் மலர்தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து பூஜ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவை யார் அச்சுறுத்த நினைத்தாலும் அதற்கான பதிலடி, அவர்கள் வழியிலேயே கொடுக்கப்படும்.ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்து மனிதநேயத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டமாகும்.பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என 15 நாள்கள் காத்திருந்தோம். ஆனால், பாகிஸ்தான் அவ்வாறு எதையும் செய்யவில்லை.
அதனால், நமது முப்படைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து பயங்கரவாதிகளுக்கு அவர்கள் வழியிலேயே தகுந்த பதிலடி கொடுத்தோம். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய, 22 நிமிடங்களில் இந்தியாவில் பலம் என்ன என்பது அவர்களுக்கு நிரூபிக்கப்பட்டது. நமது படைகளின் வீரமும், துணிச்சலும் தான் பாகிஸ்தானை வெள்ளைக் கொடியை அசைக்க வைத்து விட்டது. பாகிஸ்தானை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க அந்நாட்டு மக்கள் முன்வர வேண்டும். பயங்கரவாதம் என்னும் நோயில் இருந்து பாகிஸ்தான் மக்களை விடுவிக்க, அங்குள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும்.
பாகிஸ்தான் குடிமக்கள் உண்ணும் உணவு அமைதியான சூழலுக்கு மத்தியில் இருக்க வேண்டுமே தவிர தோட்டாக்களுக்கு மத்தியில் அல்ல. வறுமையை ஒழிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும், தீங்கு ஏற்படுத்துவதிலும் குறியாக உள்ளனர். முன்பு பிரதமராகப் பதவியேற்கும்போது நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






