மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன

புதிய வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பதற்றம் நீடிக்கிறது. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன
Published on

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்கு அங்குள்ள நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கடந்த 3-ந்தேதி, பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி, வன்முறையில் முடிந்தது. இருதரப்புக்கும் இடையே கலவரம் மூண்டது. 70 பேர் பலியானார்கள். கலவரத்தை ஒடுக்க ராணுவம், போலீசார் என 10 ஆயிரம்பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு வாரத்தில் அமைதி திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. மணிப்பூர் கிழக்கு மாவட்டம் நியூ செகோன் பகுதியில் கடைகளை அடைக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் அச்சுறுத்தல் விடுத்தது.

வீடுகளுக்கு தீவைப்பு

அதைத்தொடர்ந்து ஒரு கும்பல் 2 வீடுகளை தீயிட்டு கொளுத்தியது. அந்த வீட்டில் ஆட்கள் இல்லாததால், உயிர்ச்சேதம் இல்லை.

இதைத்தொடர்ந்து, இம்பால் கிழக்கு மாவட்டம் புகாவோ, லெய்டான்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க உரிமம் பெற்ற துப்பாக்கிகளுடன் காவல் இருக்க தொடங்கினர்.

அவர்கள் பதுங்கு குழிகளையும் வெட்டி இருந்தனர். அத்தகைய 5 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

பதற்றம்

இந்நிலையில், நேற்று மணிப்பூர் மாநிலம் அமைதியாக காணப்பட்டது. இருப்பினும், பதற்றமாக இருந்தது. வன்முறை நடந்த நியூ செகோன் பகுதியில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு 'மைக்' மூலம் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியபடி சென்றனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் 'மெய்தி' இன மக்கள், பழங்குடியின பயங்கரவாதிகள் தங்கள் பகுதியில் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

ஊரடங்கு தளர்வு, 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.

முதல்-மந்திரி எச்சரிக்கை

முதல்-மந்திரி பிரேன் சிங், அப்பாவி மக்களின் வீடுகளை எரிக்க வேண்டாம் என்று வண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

வன்முறை தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமூக வலைத்தளங்களில் வதந்தியையும், வெறுப்பையும் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய படைகளில் இருந்து மேலும் 20 கம்பெனி படையினரை கேட்டுப்பெற முடிவு செய்துள்ளோம். ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com