இமாசல பிரதேசத்தில் பாரா கிளைடிங் சாகச வீரர் கீழே விழுந்து உயிரிழப்பு

மோகன் சிங்குடன் சென்ற சுற்றுலா பயணி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பிர் பில்லிங் பகுதி பாரா கிளைடிங் எனப்படும் சாகச விளையாட்டுக்கு புகழ் பெற்றது. பாராசூட் போன்ற இறக்கையை பயன்படுத்தி உயரமான இடத்தில் இருந்து கீழே குதித்து காற்றின் உதவியுடன் மிதந்து செல்வது பாரா கிளைடிங் எனப்படுகிறது. நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்களின் உதவியுடன் சுற்றுலா பயணிகளும் பாரா கிளைடிங் செய்து மகிழ்கின்றனர்.
அந்த வகையில், பிர் பில்லிங் பாரா கிளைடிங் தளத்தில் இன்று மோகன் சிங் என்ற பாரா கிளைடிங் வீரரும், மற்றொரு சுற்றுலா பயணியும் சேர்ந்து பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காற்றில் பறந்து பாரா கிளைடிங் செய்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக பாராசூட்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் பாரா கிளைடிங் சாகச வீரர் மோகன் சிங்கிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவருடன் சென்ற சுற்றுலா பயணி சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மோகன் சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதா? அல்லது மனித தவறால் ஏற்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தால் பாரா கிளைடிங் போன்ற சாகச விளையாட்டுகள் நடத்தப்படும் இடங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் போதுமானதாக உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






