இமாசல பிரதேசத்தில் விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்

இமாசல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் நந்தன் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இமாசல பிரதேசத்தில் விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்
Published on

சிம்லா

இமாசல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனி அடர்ந்த பயிர்கார்ஹ்-சாக் பகுதியில், கார் ஒன்று சென்றுள்ளது. கடந்த 29-ந்தேதி இரவில் அந்த கார் விபத்தில் சிக்கியது. ஆனால், 30-ந்தேதி மதிய அளவிலேயே விபத்து பற்றி உள்ளூர்வாசிகளுக்கு விவரம் தெரிந்துள்ளது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். அந்த பகுதியில் மீட்பு பணி நடந்து வருகிறது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹன்ஸ் ராஜ் கூறினார். எனினும், ஆழ்ந்த சரிவு மற்றும் மோசமடைந்த வானிலை ஆகியவற்றால் மீட்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், உடலை மீட்கும் பணிகள் அடுத்த நாள் காலை தொடரும் என்று அவர் கூறினார்.

இந்த சூழலில், மீட்பு குழுவினர் பள்ளத்தாக்கில் இறங்கி 8 பேரின் உடலை மீட்டனர். இதில், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஓயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்த கார்த்திகேயன் (வயது 48), அவருடைய மனைவி மணிமாலா (வயது 42), மகன் நந்தன் (வயது 13) என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் தமிழக பூர்வீகம் கொண்டவர்கள் ஆவர்.

இந்த விபத்தில் பலியான மணிமாலாவின் சொந்த ஊர், திருப்பூர் செங்குந்தாபுரம் முதல் வீதியாகும். இவருடைய தந்தை பெயர் கோவிந்தராஜ். தாயார் சரோஜா (வயது 70). இவர்களின் 2-வது மகள் தான் மணிமாலா. கார்த்திகேயனின் சொந்த ஊர் ஈரோடு ஆகும்.

கார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பெங்களூரு ஒயிட்பீல்டு நகரில் வசித்து வந்தார். அவர் கடுகோடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவர்களின் மகன் நந்தன் டேக்வாண்டோ வீரர். இமாசல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் நந்தன் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com