நீதிமன்ற வளாகங்களில் வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டால் நடவடிக்கை - இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை

இந்திய பார் கவுன்சில் வக்கீல்கள், சட்ட மாணவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில் டிஜிட்டல் ஒழுக்க வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற வளாகங்களில் வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டால் நடவடிக்கை - இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

நீதிமன்ற வளாகங்களில் வீடியோ எடுத்து 'ரீல்ஸ்' வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஜிட்டல் ஒழுக்க வழிகாட்டுதல்

வக்கீல்கள், சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதுமக்களை ஈர்ப்பது, தொழில்முறை விளம்பரம் செய்வது, நீதிமன்ற வளாகங்களில் ரீல்ஸ், சார்ட்ஸ் மற்றும் வீடியோக்களை உருவாக்கி இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூ டியூப் போன்ற தளங்களில் வெளியிடுவது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக அனைத்து மாநில பார் கவுன்சில்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து, இந்திய பார் கவுன்சில் வக்கீல்கள், சட்ட மாணவர்கள், பயிற்சி வக்கீல்கள் மற்றும் சட்டக் கல்வியாளர்களின் சமூக ஊடக பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில் டிஜிட்டல் ஒழுக்க வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்ற வளாகங்களில் ரீல்ஸ், சார்ட்ஸ் மற்றும் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் உருவாக்குதல், கோட், கவுன், ரோப் ஆகியவற்றை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதுமக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் செய்வது,

தடை

உறுதியான ஜாமீன், நிச்சயமான விடுதலை, உடனடி நிவாரணம், 100 சதவீத வெற்றி போன்ற உத்தரவாத விளம்பரங்கள் வெளியிடுவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்தவரின் விவரங்கள், ஜாமீன் உத்தரவுகள், வழக்கு ஆவணங்கள், உரையாடல் பதிவுகள், மருத்துவ பதிவுகள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை வெளியிடுதல்,

ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகள், போலி மேற்கோள்கள், தவறான சட்ட உள்ளடக்கங்களை வெளியிடுதல்,

நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை எடிட் செய்து பரபரப்பாக வீடியோ வெளியிடுதல், வழக்கு தொடர்ந்தவர்கள் கூறுவது போன்ற போலியான கருத்துகளை பகிர்வது போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கமிட்டி

அதேவேளையில், சமூக ஊடகங்கள் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தடை ஏதும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

அதாவது, சட்ட விழிப்புணர்வு, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த நடுநிலையான விளக்கங்கள், சட்டக் கல்வி, அரசியல் சாசன விழிப்புணர்வு, நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான புதிய தகவல்கள், சட்ட சொற்பொழிவுகள், குறும்பட வடிவிலான சட்ட விளக்கங்கள் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், இத்தகைய உள்ளடக்கங்கள் விளம்பர நோக்கமின்றி துல்லியமான சட்டத் தகவல்களுடன், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை முறைப்படுத்தும் வகையில் அனைத்து மாநில பார் கவுன்சில்கள், டிஜிட்டல் ஒழுக்க கமிட்டி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இந்த கமிட்டி, சமூக ஊடக புகார்களை பெறுதல், ஆரம்ப கட்ட விசாரணை நடத்துதல், ஒழுங்கு நடவடிக்கைகளைபரிந்துரைத்தல், தொழில்முறை ஒழுக்க விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணித்தல் போன்ற பொறுப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஒழுக்க வழிகாட்டுதலை மீறும் வக்கீல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, தேவையான வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com