சிவசேனாவை காப்பாற்ற புயலாக மாறிய ஆதித்ய தாக்கரே; வெற்றி கிடைக்குமா?

சிவசேனாவை காப்பாற்ற ஆதித்ய தாக்கரே களமிறக்கப்பட்டு உள்ளார். அவரது புயல் வேகம் வெற்றியை தருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவசேனாவை காப்பாற்ற புயலாக மாறிய ஆதித்ய தாக்கரே; வெற்றி கிடைக்குமா?
Published on

புயல் வேக சுற்றுப்பயணம்

மராட்டியத்தில் பலம் வாய்ந்த கட்சியான சிவசேனா கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவில் பெரும் சரிவை சந்தித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளார். 12 எம்.பி.க்களும் அவருடன் உள்ளனர். இதுதவிர தானே, நவிமும்பையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் பலரும் ஷிண்டே அணியில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

எனவே கட்சியை காப்பாற்ற சிவசேனா தலைவரின் மகன் ஆதித்ய தாக்கரே களத்தில் இறங்கி உள்ளார். மும்பையைவிட்டு வெளியே வரமாட்டார், கட்சி தலைவர்களை விட பாலிவுட் பிரபலங்களுக்கு தான் ஆதரவாக உள்ளார் என விமர்சிக்கப்பட்ட அவர் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறார். கடந்த 1 மாதமாக அவர் மாநிலம் முழுவதும் குறிப்பாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு புயல் வேக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார். மும்பையில் கிளை அலுவலகங்களுக்கு சென்று கூட கட்சியினரை பார்த்து வருகிறார்.

கடும் விமர்சனம்

வழக்கமாக தாக்கரே குடும்பத்தினர் பொது கூட்ட மேடைகளில் பேசுவதோடு சரி, கட்சியின் மூத்த தலைவர்களை மட்டுமே சந்தித்து பேசுவார்கள். இந்தநிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஆதித்ய தாக்கரே களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிஷ்தா யாத்திரை, சிவ் சம்வாட் என சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆதித்ய தாக்கரே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை துரோகிகள் என கடுமையாக விமர்சித்து வருகிறார். இது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி அணியை சேர்ந்த சஞ்சய் ஷிர்சாட் எம்.எல்.ஏ. அவரது அலுவலகத்தில் இருந்த உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே படத்தை நீக்கி உள்ளார். எங்களை துரோகிகள் என அழைப்பவர்களின் படத்தை வைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

தாமதமான சிறிய முயற்சி

இதற்கிடையே கட்சியை காப்பாற்ற ஆதித்ய தாக்கரே எடுத்து உள்ள முயற்சி குறித்து மும்பையில் உள்ள கல்லூரியின் அரசியல் பேராசிரியர் கேத்தன் போசலே கூறுகையில், " கட்சி காப்பாற்ற ஆதித்ய தாக்கரே எடுத்த நடவடிக்கை மிகவும் சிறிய, தாமதமான முயற்சி ஆகும். ஏற்கனவே பல ஓட்டைகள் விழுந்த கப்பலை காப்பாற்ற அவர் முயற்சி செய்கிறார் " என்றார்.

ஆதித்ய தாக்கரே மிகவும் தாமதமாக களத்தில் இறங்கி இருப்பதாகவும், எனினும் இது தனது திறமையை நிரூபிக்க அவருக்கு கிடைத்த வாய்ப்பு என சிவசேனாவை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.

"இதுவரை ஆதித்ய தாக்கரேவுக்கு எல்லாம் தட்டில் வைத்து பரிமாறப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள சூழல் அவர் பாடம் கற்று, தன்னை நிரூபிக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு " என்றும் அவர் கூறினார்.

வெற்றி கிடைக்குமா?

இதற்கிடையே 32 வயதான ஆதித்ய தாக்கரே சிவசேனா செயல் தலைவராக நியமிக்கப்படலாம் என முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், " ஏற்கனவே ஆதித்ய தாக்கரே பல பொறுப்புகளை கவனித்து வருகிறார். எனவே அவர் பெரிய பொறுப்புகளை ஏற்பது வெறும் சம்பிரதாயமாக தான் இருக்கும் " என்றார்.

கட்சி மிகப்பொய வீழ்ச்சியை சந்தித்த பிறகு ஆதித்ய தாக்கரே அதை காப்பாற்ற களத்தில் இறங்கி உள்ளார். அதில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com