

புதுச்சேரி,
இந்திய ராணுவத்தில் சேருவதற்கான 'அக்னிவீர்' உடல்தகுதி தேர்வு புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் கோகுல் (18 வயது). இவர் அரசு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் புதுச்சேரியில் நடந்த ராணுவ வீரர்களுக்கான உடல்தகுதி தேர்வில் பங்கேற்றார். முதலில் நடந்த 1.6 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றபோது, கோகுல் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த ராணுவ வீரர்கள், போலீசார் அவரை மீட்டு மருத்துவ குழுவினரிடம் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.