

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த மசோதாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்க வேண்டும்.ஆளும் கட்சிக்குச் சாதகமாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சுயநலத்துடன் மாற்றி அமைப்பது, தொகுதி மறுவரையறை முறைகேடு ஆகும். இது, மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
இந்தியாவின் தேர்தல் வரைபடத்தைச் சிதைக்கும் இந்தச் செயலுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். குறிப்பிட்ட தொகுதிகளில் வாக்காளர்களைக் குவித்து, அவர்களை மற்ற தொகுதிகளில் பிரிப்பதன் மூலம், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமலேயே அரசியல் முடிவைப் பாதிக்க முடியும்.
போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், சுதந்திரமான கண்காணிப்பும் இல்லாத நிலையில், தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்வது, பாஜகவுக்கு நீண்டகாலத் தேர்தல் நன்மைகளைப் பெற்றுத் தரும் வகையில் பயன்படுத்தப்படலாம்.இந்த எல்லைகள் ஆளும் கட்சிக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டால், பொதுமக்களின் கருத்துகளில் ஏற்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத்தின் கட்டமைப்பில் நியாயமான முறையில் பிரதிபலிக்காத சூழல் உருவாகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.