19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

சில முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த இருப்பதால் கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
FILEPIC
FILEPIC
Published on

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்த விவகாரம், இந்த விஷயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொன்னது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வழக்கமாக ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பாக ஆளுங்கட்சி, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தும். அதன்படி இந்த மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்டு 12-ந்தேதி முடிவடைய இருந்த கூட்டத்தொடர் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 13 மற்றும் 14-ந்தேதிகளில் அமர்வுகள் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஹல்காம் விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படலாம் என்பதாலும், சில முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த இருப்பதாலும் கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமான மசோதா அறிமுகத்தில் அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது தொடர்பான மசோதாவும் இடம் பெறலாம் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com