பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை முன்பதிவு 10 சதவிகிதம் சரிவு


பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை முன்பதிவு 10 சதவிகிதம் சரிவு
x

அமர்நாத் குகைக் கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோவில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த ஏப்ரல் 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக காஷ்மீரில் சுற்றுலாத்துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதே வேளையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் சுமார் 10 சதவீதம் சரிவை சந்திந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22-ந்தேதிக்கு முன்பு வரை சுமார் 2.36 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்திருந்ததாகவும், அதன் பிறகு முன்பதிவு எண்ணிக்கு கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை முன்பதிவு செய்தவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 85 ஆயிரம் பேர் தங்கள் முன்பதிவை உறுதி செய்துள்ளனர் என்றும், இனி வரும் நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story