அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.

அமர்நாத் யாத்திரை

இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 28ம் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 3ம் தேதி தொடங்கிய யாத்திரையில் இதுவரை 3.77 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

யாத்திரை தற்காலிக ரத்து

இந்நிலையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செயப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக், ரஜோரி, பூஞ்ச் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அனந்த்நாக் மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com