

புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் ஆன்லைனில் விற்கப்படுவதாக கூறி, அமேசான் விற்பனை தளத்தில் இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை ‘சந்து டிரேடிங் கம்பெனி’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ‘பீகாரி பிரதர்ஸ்’ என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா ஆகியவை இதில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த இனிப்புகளின் விவரக்குறிப்புகளில் ‘அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்’ என்றும், ‘ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை உண்மை என நம்பி பலர் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், இவை எதுவும் உண்மையான பிரசாதங்கள் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவற்றை விற்பனை செய்த அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ள நுகர்வோர் தீர்ப்பாயம், நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே என்று கூறிக்கொண்டு பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என அமேசான் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு' (Confederation of All India Traders) அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.