

புனே
மராட்டியத்தில் ஆர்.டி.ஐ. சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களை வாபஸ் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் என அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
மராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்.டி.ஐ.) விதிகளில் சில புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தற்போதுள்ள தொகையை விட விண்ணப்ப கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
இதனால், ரூ.10-க்கு பதிலாக, ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன், 150 வார்த்தைகள் இடம் பெறக்கூடிய அளவுக்கு, தங்களுடைய கோரிக்கைகளுடன் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும் என திருத்தங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், மராட்டிய அரசு தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்.டி.ஐ.) விதிகளில் சில புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது. ஆர்.டி.ஐ. என்பது அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் சட்டம் அல்ல. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. கட்டணத்தை உயர்த்தும் அரசு, தவறான தகவல்களை தரும் அதிகாரிகள் மீதான அபராத தொகையை ஏன் உயர்த்தவில்லை?
மனுதாரர்கள் தங்களது அடையாள அட்டையை இணைப்பது கட்டாயம் என்று அரசு புதிய விதியை சேர்த்துள்ளது. அடையாள அட்டையை கட்டாயமாக்கினால் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது வக்கீல் உதவியை பெறக்கூடாது என்ற விதியும் கண்டிக்கத்தக்கது. இதனால், வெளிப்படைத்தன்மை முற்றிலும் அழியும். எனவே, இந்த திருத்தங்களை அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். தவறினால், எனது உயிரே போனாலும் கவலையில்லை, ஜூலை 5-ந்தேதி முதல் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி யாதவ் பாபா கோவிலில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வேன் என தெரிவித்து உள்ளார்.
அவர் 1998, 2001, 2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று உள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுபற்றி தொடர்ந்து அவர் கூறும்போது, தகவலை பெறுவதில் இருந்து நாட்டு மக்கள் விலகி செல்லும் வகையில் இந்த திருத்தங்கள் உள்ளன. அதன் முக்கிய கொள்கைகளையும் பலவீனப்படுத்துகின்றன. அதனால், இந்த திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அப்படி இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வேன் என கூறியுள்ளார். விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வதற்கு பதிலாக தகவலை வெளிப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தி உள்ளார்.