வன்முறைகளுக்கு மத்தியில் மணிப்பூரில் நாகா பழங்குடியினர் இன்று பேரணி

மணிப்பூரில் தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் நாகா பழங்குடியினர் இன்று பேரணி நடத்தவுள்ளனர்.
வன்முறைகளுக்கு மத்தியில் மணிப்பூரில் நாகா பழங்குடியினர் இன்று பேரணி
Published on

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த மே மாதம் பெரிய அளவில் கலவரம் வெடித்தது.

3 மாதங்களை கடந்தும் இன்னும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளபோதிலும் வன்முறை சம்பங்கள் தொடர்ந்து வருகின்றன.

இதனிடையே மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர இருதரப்புடனும் மத்திய அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நாகா பழங்குடியின அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

நாகா பழங்குடியினர் பேரணி

இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக மணிப்பூரில் நாகா பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பிரமாண்ட பேரணி நடத்தவுள்ளதாக செல்வாக்கு மிக்க நாகா அமைப்பான ஐக்கிய நாகா கவுன்சில் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமெங்லாங், சேனாபதி, உக்ருல் மற்றும் சந்தேல் மாவட்டங்களின் மாவட்ட தலைநகரங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பேரணிகள் நடைபெறும். இதில் நாகா மக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு கோரிக்கை

வன்முறைகளுக்கு மத்தியில் நாகா பழங்குடிகளின் பேரணி நடைபெற இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே ஐக்கிய நாகா கவுன்சில் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பேரணிக்கு குகி பழங்குடிகளின் அதிகாரமிக்க அமைப்பான குகி இன்பி மணிப்பூர் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாகா பழங்குடியினரின் செல்வாக்கு மிக்க மற்றொரு அமைப்பான 'நாகா ஹோஹோ' மணிப்பூரில் உள்ள நாகா எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் வருகிற 21-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ககூடாது என வலியுறுத்தியுள்ளது.

அதேபோல் தொடரும் இனமோதலை கருத்தில் கொண்டு பெரும்பாலான குகி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என குகி இனத்தின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com