'கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம்' - அமித்ஷா பேச்சு

கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
'கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம்' - அமித்ஷா பேச்சு
Published on

புதுடெல்லி,

கூட்டுறவு சங்கங்களை அரசின் இ-மார்க்கெட் தளத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூட்டுறவுத்துறை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், அதை நவீனப்படுத்தி அதிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறையில் விரைவான மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்த மாற்றங்களை நாம் செய்யவில்லை என்றால், மக்கள் நம்மை மாற்றி விடுவார்கள்.

கூட்டுறவுத்துறையில் அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்.

ஒரே நபர் ஆண்டுதோறும் கூட்டுறவு சங்க நிர்வாகியாக தேர்வு செய்வது சரியல்ல. இந்த முறை நல்லதல்ல. நானே தொடக்க வேளாண்மை கடன் சங்கம் ஒன்றில் கடந்த 25 ஆண்டுகளாக தலைவராக இருக்கிறேன். இது இந்த ஆண்டு மாற்றப்படும்.

இது மட்டுமின்றி இந்த தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை அவசியம். இதற்கான விதிமுறைகளை அமைச்சகம் வகுத்து வருகிறது.

இதைப்போல கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கொள்முதல் நடவடிக்கைகளுக்காக அரசின் இ-மார்க்கெட் தளத்தை தவிர, வேறு எந்த தளமும் சிறந்ததாக இருக்காது.

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்கி வருகிறது. ஒரு தரவுத்தளத்தை தயார் செய்கிறது. பயிற்சி நோக்கங்களுக்காக ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்கிறது மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிகளை அதிகரிக்க ஒரு ஏற்றுமதி இல்லத்தை நிறுவுகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்கி மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

அதன்படி சுமார் 63,000 தாடக்க வளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை 5 ஆண்டுகளில் கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான மொத்த செலவினம் ரூ.2,516 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ 1,528 கோடி ஆகும் என்று அமித்ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com