அமித்ஷாவின் போலி வீடியோ விவகாரம்: 'மத்திய அரசுக்கு அஞ்சமாட்டோம்..' தெலுங்கானா முதல் மந்திரி

அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமித்ஷாவின் போலி வீடியோ விவகாரம்: 'மத்திய அரசுக்கு அஞ்சமாட்டோம்..' தெலுங்கானா முதல் மந்திரி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமித்ஷாவின் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியதாவது;

"டெல்லி காவல்துறையின் சம்மனுக்கு பயப்பட மாட்டேன். அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமான வரி போன்றவற்றை தொடர்ந்து தற்போது டெல்லி போலீசை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பயன்படுத்துகின்றனர். கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் பாஜகவை நிச்சயம் போராடி தோற்கடிப்போம்." இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com