பிரதமர் மோடியுடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி சந்திப்பு

பிரதமர் மோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பா.ம.க.வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் மோடி தெரிவித்தார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் உடல்நலன் குறித்து அன்புமணி ராமதாசிடம், மோடி விசாரித்தார். மேலும் அவருடைய உடல் நலனை கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். தமிழகத்தின் நலனுக்காக காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்கவேண்டும்.

ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளையும் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார்.

மோடி உடனான அன்புமணி ராமதாசின் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் சுமுகமாகவும், மன நிறைவளிக்கும் வகையிலும் இருந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com