

அமராவதி,
ஆந்திர பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை நாட்டின் முன்மாதிரி நிறுவனமாக மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் திறப்பு விழாவை தொடர்ந்து, புதிய உபகரணங்களின் செயல்பாட்டு திறன்கள் குறித்து அதிகாரிகள் முதல் மந்திரிக்கு விளக்கினர்.
மத்திய அரசு நிதியை திறம்பட பயன்படுத்தியதற்காக துறையை பாராட்டிய நாயுடு, மனித உயிர்களை காப்பாற்றுவதே துறையின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பாதாவது:-...
ஆந்திர பிரதேசம் நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழும் வகையில், நாங்கள் ரூ.252 கோடி செலவில் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை நவீனமயமாக்கி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக, தீயணைப்பு துறை ரூ.33 கோடி செலவில் 25 மேம்பட்ட தீயணைப்பு வாகனங்களையும், உயர் அழுத்த பம்புகள் பொருத்தப்பட்ட 40 விரைவு மீட்பு வாகனங்களையும், 50 காற்றடைக்கக்கூடிய ரப்பர் படகுகளையும், 30 பிஏ செட் கம்ப்ரசர்களையும் வாங்கியுள்ளது.
அமராவதி அணிவகுப்பு மைதானத்திலிருந்து இந்த புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தேன். திறமையான சேவைகளின் மூலம் மக்களின் பாராட்டுகளை பெறுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.