

புதுடெல்லி,
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, நீட் மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட மறு தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20,000க்கும் அதிகமானோரும் பங்கேற்றனர். இந்நிலையில், நீட் மறுதேர்வு முடிவுகளை வரும் 20-ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.
மேலும் அண்மையில் நடந்த நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்ட தேசிய தேர்வு முகமை மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரியானது. அந்த கேள்விக்கு 2 விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் விடைக்குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.