பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் - ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் கச் நகரில் உள்ள பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அசுரர்களை அழிக்க முடியும் என்பதற்கு துர்கா அன்னை நமக்கு காட்டும் அடையாளம். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்று படைகளும் நமது பலத்தின் மூன்று தூண்கள். இந்த மூன்று படைகளும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான், ஒவ்வொரு சவாலையும் திறம்பட எதிர்கொள்ள முடியும். நமது அரசு தொடர்ந்து தனது படைகளின் வலிமையை நிரூபித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் ஒத்துழைப்பே ஆபரேஷன் சிந்தூரை சோதனை நேரத்தில் செயல்படுத்தியது. போரை நடத்துவது ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் அல்ல, இந்திய படைகள் வெற்றிகரமாக சாதித்தது.
பயங்கரவாதம் உட்பட எந்தவகையான பிரச்சினைகளையும் சமாளித்து தோற்கடிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. உலகின் எந்த சக்தியும் நம் இறையாண்மையை சவால் செய்தால் அமைதியாக இருக்க முடியாது. குஜராத் எல்லையோரம் உள்ள 'சர் கிரிக்' சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






