

புதுடெல்லி,
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை கடந்த 9-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, 2008-ம் ஆண்டு ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என கோர்ட்டு வற்புறுத்த முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து தமிழக அரசின் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.