

டெல்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, முன்னாள் முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவால், தாய் கீதா தேவி மற்றும் 25 வயதான மகன் புல்கித் கெஜ்ரிவால் ஆகிய 5 பேருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தற்போதைய வாக்காளர் விவரங்களை இணைக்க முடியாதவர்களுக்கு ‘கடந்த சிறப்பு தீவிர திருத்தத்த பட்டியலுடன் இணைக்கப்படாதவர்கள்’ என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கெஜ்ரிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், டெல்லி சட்டசபை தொகுதி எண் 40-ன் குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த 110 பேரில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதியில்தான் புதுடெல்லி தொகுதி அடங்குகிறது.
டெல்லியில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது, வாக்காளர் விவரங்களை முந்தைய பட்டியலுடன் இணைக்க முடியாதவர்கள் மற்றும் விவரங்களில் ‘ முரண்பாடுகள்’ கண்டறியப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 31,63,930 நோட்டீஸ்கள் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது