ஷாருக்கான் மகன் வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சென்னைக்கு இடமாற்றம்

ஷாருக்கான் மகன் வழக்கை விசாரித்து சர்ச்சையில் சிக்கிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஷாருக்கான் மகன் வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சென்னைக்கு இடமாற்றம்
Published on

மும்பை,

2021 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கப்பலில் பயணித்த இந்தி நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் 20 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே, ஆர்யன் கானின் வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து டெல்லி சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றி மத்திய போதைப்பொருள் தடுப்பு முகமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் 14 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதில் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் பெயர் இடம்பெறவில்லை.

அதேவேளை, ஆர்யன் கான் வழக்கில் இருந்து மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கடந்த ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்டு பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குனரகத்தின் மும்பை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கையில் சொகுசு கப்பல் சோதனையின் போது மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, போதைப்பொருள் வழக்கில் சரிவர விசாரணை நடத்தாத முன்னாள் அதிகாரி சமீர் வாங்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதித்துற்ஐ அமைச்சகத்திற்கு மத்திய அரசு பரிந்துரை வழங்கியது.

இந்நிலையில், பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குனரகத்தின் மும்பை பிரிவில் பணியாற்றி வரும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் மும்பை பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வரிசேவை இயக்குனரகத்தின் சென்னை பிரிவிற்கு சமீர் வான்கடே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com