பாகுபலிக்கே சவால் விடுவது போல்... பைக்கை தூக்கி சென்ற நபர்; வைரலான வீடியோ


பாகுபலிக்கே சவால் விடுவது போல்... பைக்கை தூக்கி சென்ற நபர்; வைரலான வீடியோ
x

பைக்கை தோளில் தூக்கி வைத்து கொண்டு ரெயில்வே கிராசிங்கை கடந்து சென்ற நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ரெயில்களில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அவர்களில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விற்பனைக்காக சரக்குகளை கொண்டு செல்பவர்கள் என பலரும் அடங்குவர். ரெயில்கள் அவற்றுக்காக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் அதனதன் வழியில் பயணிக்கும்.

எனினும், சில இடங்களில் ரெயில் செல்லும் வழியை கடந்து செல்வதற்காக ரெயில்வே கிராசிங் அல்லது லெவல் கிராசிங் அமைக்கப்பட்டு இருக்கும். ரெயில் செல்லும்போது இந்த ரெயில்வே கிராசிங் மூடப்படும். இதன் இருபுறமும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

ரெயில் சென்ற பின்னர் கேட் திறக்கப்பட்டு, வாகனங்கள் பயணிக்க தொடங்கும். எனினும், ரெயில்வே கிராசிங்கில் காத்திருக்க பிடிக்காமல் நடந்து வருபவர்களில் சிலர் குறுகலான வழியே கடந்து மறுபுறம் சென்று விடுவதுண்டு.

வாகனங்களில் செல்பவர்கள் அப்படி செய்ய முடியாது. ஆனால், நம்மூரில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பாகுபலிக்கே சவால் விடும் வகையில், அதனை தூக்கி தோள் மீது வைத்து ரெயில்வே கிராசிங்கை கடந்து மறுபுறம் செல்கிறார். இதனை மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ பகிரப்பட்ட பின்னர், 10 லட்சம் முறை பார்க்கப்பட்டு உள்ளது. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.

அவற்றில், எங்கள் ஊரிலும் இரும்பு மனிதன் இருக்கிறான் என்றும், அடுத்த சூப்பர் ஹீரோவை பாருங்கள் என்றும் சிலர் விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர். இதேபோன்று, பைக்குகளின் தரம் குறைந்து விட்டது என்றும், ஜிம்முக்கு செல்ல அவருக்கு இன்று நேரம் இல்லை என்றும், பாகுபலி சட்ட மீறலில் ஈடுபடுகிறார் என்றும் ஒரு சிலர் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story