ஆயுட்காலம் குறைவு என கூறிய ஜோதிடர்... பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

வித்யா ஜோதியும், குடகு மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆயுட்காலம் குறைவு என கூறிய ஜோதிடர்... பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி(வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை செய்து வந்தார். இந்தநிலையில் வித்யா ஜோதியும், குடகு மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இன்னும் சிறிது நாட்களில் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். இந்த நேரத்தில் ஜோதிடர் ஒருவர் வித்யா ஜோதியின் ஜாதகத்தை பார்த்து அவருக்கு ஆயுட்காலம் குறைவு என்று கூறினார். மேலும் அவரது ஆயுட்காலத்தை நீட்டிக்க மாரம்மாதேவிக்கு 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி வித்யா ஜோதியின் குடும்பத்தினர் தனது மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு 9 நாட்கள் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் வித்யா ஜோதி தான் சீக்கிரம் இறந்து விடுவேன், ஆகையால் தான் குடும்பத்தினர் தனது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள் என்று நினைத்துள்ளார். இந்தநிலையில் வித்யா ஜோதியின் வீட்டில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடந்து வந்துள்ளது. இதில் 9-வது நாள் பூஜையில் மாரம்மா தேவிக்கு தாலியை காணிக்கையாக வழங்க ஜோதிடர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி 9-வது நாள் பூஜையில் கலந்து கொண்ட வித்யா ஜோதி தாலியை காணிக்கையாக வழங்கியுள்ளார். பூஜைகள் அனைத்தும் முடிந்து இரவு உணவுக்கு பின் குடும்பத்தினர் மற்றும் வித்யா ஜோதி ஆகியோர் இரவு தூங்குவதற்காக அறைக்கு சென்றனர். பின்னர் மறுநாள் காலையில் வித்யா ஜோதியின், தாயார் அவரின் அறைக்கதவை தட்டியுள்ளார். ஆனால் வித்யா ஜோதி கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக அறைக் குள் பார்த்தனர். அப்போது வித்யா ஜோதி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் பாகலகுண்டே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வித்யா ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஜோதிடர் ஆயுட்காலம் குறைவு என்று கூறியதால் வித்யா ஜோதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com