மும்பையில் பெய்த கனமழை: வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

கடும் மழையைத் தொடர்ந்து மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் இருந்த வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் பெய்த கனமழை: வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி 15 பேர் உயிரிழப்பு
Published on

மும்பை,

தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. டெல்லி, மும்பையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல்வேறு இடங்களில் 120 மிமீ மழை பெய்துள்ளது.

அதன்பின் இரவு நேரத்திலும் விடாமல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீரில் மிதந்தப்படி வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் அங்கு மேலும் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரத்நகர் பகுதியில் ஒரு குடியிருப்பு மீது மரம் சாய்ந்து சுவர் மீது விழுந்தது. இதில் சுவர் இடித்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்புத் துறை, தேசியபேரிடர் மீட்புத்துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் 16 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

புறநகரான விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மும்பையில் சியான், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்சிஎப் காலனி, எல்பிஎஸ் சாலை, வாட்லா பாலம் ஆகியவற்றில் மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com