புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக டெல்லி சட்டசபை கலைப்பு

சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அதிஷி ராஜினாமா செய்தார்.
புதுடெல்லி,
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பா.ஜ.க.விடம், ஆளும் ஆம்ஆத்மி ஆட்சியை பறிகொடுத்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லியில் மெஜாரிட்டிக்கு 36 இடங்களே போதும் என்ற நிலையில் பா.ஜ.க. 48 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. தலைநகர் டெல்லியை கைப்பற்றி உள்ளது. அதோடு டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி, நேற்றுடன் முடிவுக்கு வந்தது..
ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பறிகொடுத்தது மட்டுமின்றி ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்களும் தோல்வியடைந்துள்ளனர். இருப்பினும் கல்காஜி தொகுதியில் டெல்லி முதல்-மந்திரியான அதிஷி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து முதல்-மந்திரி அதிஷி இன்று காலை 11 மணியளவில் டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனாவை சந்தித்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார்.
இதனையடுத்து டெல்லியில் புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக 7வது சட்டசபையை கலைத்து துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ் மற்றும் வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு பா.ஜ.க. தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம் மற்றும் மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.






