உல்லாசமாக இருக்கும்போது உண்டாகிவிட்டது; வளர்க்க முடியாது.. குழந்தையை பஸ்சில் இருந்து தூக்கி வீசிய 19 வயது இளம்பெண்

சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பஸ் ஜன்னல் வழியாக குழந்தை வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் பர்பானியில் ஓடும் ஸ்லீப்பர் கோச் பஸ்சில் 19 வயது பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் அவரும் அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஆணும் புதிதாகப் பிறந்த குழந்தையை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிந்ததால் குழந்தை இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மராட்டியத்தில் உள்ள பர்பானியை சேர்ந்தவர் அல்தாப் ஷேக். இவரது மனைவி ரித்திகா தேரே. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று தம்பதியினர் காலை 6.30 மணியளவில் புனேயில் இருந்து பர்பானிக்கு, ஸ்லீப்பர் வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பத்ரி-சேலு சாலையில் அந்த பஸ் சென்றபோது, ரித்திகா தேரேவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஓடும் பஸ்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியினர் பச்சிளம் குழந்தையை யாருக்கும் தெரியாமல் ஒரு துணியில் போட்டு ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக கூறப்படுகிறது. இதில் அந்த குழந்தை இறந்தது.
இதற்கிடையே பஸ் டிரைவர், ஜன்னலுக்கு வெளியே ஏதோ வீசப்பட்டதை கவனித்தார். அதைப்பற்றி டிரைவர், அல்தாப் ஷேக்கிடம் விசாரித்தபோது, பயணத்தின்போது தனது மனைவிக்கு குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக கூறினார். அந்த நேரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பஸ் ஜன்னல் வழியாக குழந்தை வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதுபற்றிய தகவல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பறந்தது. போலீசார் அந்த சொகுசு பஸ்சை துரத்தி பிடித்தனர். பின்னர் போலீசார் அந்த பஸ்சில் ஏறி சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் குறிப்பிட்ட தம்பதியை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் உல்லாசமாக இருக்கும்போது உண்டாகிவிட்டது; வளர்க்க முடியாது என கருதி குழந்தையை வீசி கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதனைகேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், அல்தாப் ஷேக், ரித்திகா தேரே ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புனேயில் ஒன்றாக வசித்து வருவது தெரியவந்தது. அவர்கள் கணவன்-மனைவி என்று கூறிக்கொண்டனர். ஆனால் அதனை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






