

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் வர்ஷாவிற்கு நவம்பர் 30-ம் தேதி இருகுழந்தைகள் பிறந்தது. வர்ஷா 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தது. பிறந்த பெண் மற்றும் ஆண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது என மருத்துவமனை டாக்டர்கள் வர்ஷாவின் கணவர் ஆசிஷிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து ஒப்படைத்துவிட்டனர். ஆசிஷ் குழந்தைகளுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு கொண்டு சென்ற போது ஆண் குழந்தையின் உடலில் அசைவு காணப்பட்டது.
உடனடியாக உறவினர்கள் ஆண் குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெற்றோர்கள் தரப்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, குறிப்பிட்ட மருத்துவர் உடனடியாக வேலையைவிட்டு நீக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் தொடர்பில் உள்ளோம், அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே உயிருடன் உள்ள 6 மாத சிசுவை பராமரிக்க ரூ.50 லட்சம் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு நியமனம் செய்த குழுவானது நேற்று விசாரித்து, மருத்துவமனை நிர்வாகம் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்பாக விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை தொற்று மற்றும் பிற மருத்துவ பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்து என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், வென்டிலேட்டர் உதவியுடன் இருந்த 6 மாதத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்தது என்ற வருத்தத்திற்குரிய செய்தியை கேள்விப்பட்டோம். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு நாங்கள் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். குழந்தை பிறக்க வேண்டிய காலத்திற்கு மிகவும் முன்னதாக பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது என்பது மிகவும் அரிதானது என்பது எங்களால் புரிந்துக் கொள்ளமுடியும், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு இது மிகவும் வலிநிறைந்த சம்பவமாகும்.அவர்களுக்கு வலிமையை கொடுக்க பிரார்த்திக்கிறோம், என கூறப்பட்டு உள்ளது.