பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி - வெங்கைய்யா நாயுடு கருத்து

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி - வெங்கைய்யா நாயுடு கருத்து
Published on

புதுடெல்லி,

இந்திய போலீஸ் கழகம், நல்லாட்சிக்கான மத்திய அமைப்பு, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஒன்றாக இணைந்து காவல் பணியில் கம்பீரம் என்னும் தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கவலை தெரிவித்ததோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அழைப்பு விடுத்தார். மேலும் பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி என்றும் நாடு பயங்கரவாதம், மாவோயிசம் மற்றும் கிளர்ச்சி போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட துணை ஜனாதிபதி, 'தோட்டாக்களை விட வாக்குகள் மிகவும் சக்தி வாய்ந்தது' என்று குறிப்பிட்டார்.

மேலும் காவல் நிலையம் மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முதல் புள்ளி என்பதை சுட்டிக்காட்டிய அவர், தனது குறைகளைத் தீர்ப்பதற்கு காவல்துறையினர் திறமையானவர்கள் என்று சாதாரண மக்கள் நம்ப வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு தேடி வரும் முதல் இடம் காவல் நிலையம் என்பதால் தங்களது பிரச்சனை அங்கிருக்கும் காவல் துறையினரால் கவனிக்கப்படும், தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் உருவாக வேண்டும். 'தற்போது காவல் நிலையங்களுக்குள் நுழையும் புகார்தாரர்கள் நமது புகார் பதிவு செய்யப்படுமா? நாம் எப்படி நடத்தப்படுவோம்? என்னும் அவநம்பிக்கையுடன் வருகின்றனர் என்பதை நீங்கள் (போலீசார்) அறிவீர்கள்.

மக்களின் நட்புக்குரிய இடமாக காவல் நிலையங்களை மாற்றுவது தொடர்பாக நாம் காலகாலமாக பேசிக்கொண்டுதான் வருகிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி நடப்பதில்லை. மூத்த அதிகாரிகள் இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளாத வரையில் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்றே நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

மேலும் விசாரணை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட காவல்நிலையம் ஆகிய துறைகளில் தகவல் தொழில்நுட்பத் திறனைத் மேம்படுத்திக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com