மும்பையில் ராக்கெட்,வாண வேடிக்கை பட்டாசு வெடிக்கத் தடை

நவம்பர் 9 முதல் நவம்பர் 25-ம் தேதி இரவு 11.59 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


மும்பையில் ராக்கெட்,வாண வேடிக்கை பட்டாசு வெடிக்கத் தடை
Published on: 

மும்பை,

தீபாவளி பண்டிகையின்போது நகரின் பல்வேறு பகுதிகளில் பல தீ விபத்துகள் ஏற்பட்டதால், மும்பையில் ராக்கெட் மற்றும் வானில் பறந்து சென்று வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்க மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.

மும்பை பேரிடர் ஆணையத்தின் உத்தரவின்படி, குடியிருப்பு கட்டடங்கள், வீட்டின் மேற்கூரைகள், பால்கனிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் தீபாவளி நாளின் இரவில் மட்டும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்று பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் குடிசைகள், கடைகள், வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் என பல இடங்கள் எரிந்து சேதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, மும்பை கூடுதல் மாநகராட்சி ஆணையர் பிரஜக்தா வர்மா - லவங்கரே ஆணையின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்டுகள் மற்றும் வாண வேடிக்கைகள் போன்ற பட்டாசுகள் வீடுகளின் மேற்கூரைகள், பால்கனிகள், ஜன்னல்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மீது விழுந்து தீ விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அவற்றிற்கு தடை விதிப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் நவம்பர் 25-ம் தேதி இரவு 11.59 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

X