அதிர்ச்சி சம்பவம்.. கியாஸ் சிலிண்டர் வெடித்து சிறுவன் பரிதாப பலி


அதிர்ச்சி சம்பவம்.. கியாஸ் சிலிண்டர் வெடித்து சிறுவன் பரிதாப பலி
x
தினத்தந்தி 16 Aug 2025 11:49 AM IST (Updated: 16 Aug 2025 12:28 PM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 12 வீடுகள் சேதம் அடைந்ததுடன், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்னயன பாளையா, ஸ்ரீராம் காலனியில் வசித்து வருபவர் அய்யப்பன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். சிட்டி மார்க்கெட்டில் அய்யப்பன் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதி ஸ்ரீராம் காலனியில் வாடகை வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலையில் அய்யப்பன் வியாபாரத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் கஸ்தூரி வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. அதாவது வெடிகுண்டு வெடித்தது போன்று அந்த மர்ம பொருள் வெடித்து பலத்த சத்தம் வெளியானது. இதனால் கஸ்தூரி வீடு உள்பட அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமானது.

மேலும் கஸ்தூரி வீட்டை சுற்றியிருந்த சில வீடுகளிலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மர்ம பொருள் வெடித்ததில் அந்த வீடுகளில் இருந்த பொருட்களும் கீழே விழுந்து நொறுங்கியது. குறிப்பாக கஸ்தூரி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் உடைந்து நொறுங்கி முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

மேலும் கஸ்தூரி, சரசம்மா உள்ளிட்டோருக்கு பலத்த தீக்காயமும் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஆடுகோடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மர்ம வெடிப்பொருள் வெடித்து சிதறி இருப்பதாக தகவல் வெளியானதால் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் இருந்து கஸ்தூரி, சரசம்மா, சிறுவன் முபாரக் உள்பட 11 பேர் மீட்கப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்கள் விக்டோரியா ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முபாரக் (வயது 10) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்ததும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானூத் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் போலீஸ் கமிஷனர் ரமேஷ் பானூத், “வீடுகள் இடிந்து விழுந்து பெரும் சேதம் அடைந்ததற்கு மேல் நோட்டமாக கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி இருப்பது தெரியவந்துள்ளது. ஏனெனில் கட்டிட கழிவுகள், பிற இடிபாடுகளை அகற்றி விட்டு, வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு படையினர் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. கியாஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து சிதறி இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. சில துணிகள், படுக்கை எரிந்திருக்கிறது. 2 பெண்களுக்கு தீக்காயமும் ஏற்பட்டு இருக்கிறது.

அந்த பெண்ணின் வீட்டில் இருந்த சிலிண்டர் கள்ள சந்தையில் வாங்கப்பட்டதா? என்று விசாரணை நடக்கிறது. ஒட்டு மொத்தமாக சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 9 சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள வீடுகளுக்கு மத்தியில் முதல் தளத்தில் இருந்த வீட்டில் இந்த சம்பவம் நடந்திருப்பதே மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகி உள்ளது. நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தியுள்ளதால், அவர்கள் அளிக்கும் தகவலின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

பலியான சிறுவன் உடல் நேற்று மாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முபாரக் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

1 More update

Next Story