பெங்களூரு வெளிவட்டச்சாலையில் ‘நெரிசல் கட்டண’ முறை அமல்

கோப்புப்படம்
பெங்களூரு வெளிவட்டச்சாலையில் நெரிசல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சாலைகள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன. இதனால் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளன. பிளாக்பக் நிறுவனம் வேறு இடத்திற்கு மாறுவதாக அறிவித்தது. வாகன நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர். தொழில் நிறுவனங்களின் ஆக்ரோஷத்தால் மாநில அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநில அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தர் ஷா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர் ஆர்.கே.மிஸ்ரா, உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 90 நாட்களில் பழுதான சாலைகளை சீரமைப்பது, குப்பை கழிவுகளை அகற்றி தூய்மை ஏற்படுத்துவது, புறவழிச்சாலையில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண்பது, மெட்ரோ திட்ட பணிகளை வேகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய 90 நாட்கள் செயல் திட்டத்தை செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய கிரண் மசூம்தர் ஷா கூறுகையில், "சாலைகளை சீரமைத்தல், தூய்மை, வாகன நெரிசலுக்கு தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அடுத்த 3 மாதங்களில் அதாவது 90 நாட்களில் கண்ணுக்கு புலப்படும் அளவுக்கு மாற்றங்கள் நிகழும். சாலை பள்ளங்களை மூடுதல், தார்சாலை அமைத்தல் மற்றும் கான்கிரீட் சாலைகளை அமைத்தல், புறவழிச்சாலையை மேம்படுத்துதல் மற்றும் அதிக வாகன நெரிசல் கொண்ட 12 பிரதான சாலைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த உள்ளது" என்றார்.
சமூக ஆர்வலர் ஆர்.கே.மிஸ்ரா கூறுகையில், "அக்டோபரில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. நவம்பரில் குப்பை கழிவுகள் அகற்றி தூய்மை பராமரிக்கப்படும். டிசம்பரில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் வெளிவட்டச்சாலையில் வாகன நெரிசலுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும். அந்த சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 25 லட்சம் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேலும் வெளிவட்ட சாலையில் கார்களில் ஒருவர் மட்டுமே பயணித்தால், அத்தகைய கார்களுக்கு கட்டணம் விதிக்கும் முறை அமலுக்கு வரவுள்ளது. ஒரே காரில் பலர் பயணித்தால் அவற்றுக்கு கட்டணம் கிடையாது. மேலும் அந்த சாலையை பயன்படுத்தும் வாகனங் களுக்கு நெரிசல் கட்டணம் நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூரில் இந்த வகை விதிமுறைகளில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.






