

பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், பேனச்சனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி, 32. இவரது மனைவி காவ்யா, 27. தம்பதிக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் காவ்யா கடந்த 3 நாட்களுக்கு முன்பு சாம்பார் தயார் செய்துள்ளார். அதையே 3 நாட்களாக காவ்யா, தனது கணவர் மற்றும் குழந்தைக்கு பரிமாறி வந்துள்ளார்.
அதாவது 3 நாட்களுக்கு முன்பு தயார் செய்த சாம்பாரை, பிரிட்ஜில் வைத்து தொடர்ச்சியாக உணவுக்கு பரிமாறியதாக கூறப்படுகிறது. 3-வது நாளில் உணவுக்கு சாம்பார் பரிமாறிய மனைவி காவ்யா மீது ரங்கசாமி கடும் அதிருப்திஅடைந்தார். 3 நாட்களாக ஏன் ஒரே சாம்பாரை பரிமாறுகிறாய்? என கேள்வி கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ரங்கசாமி, மனைவி காவ்யாவை திட்டியுள்ளார். அத்துடன் அவரை கணவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த காவ்யா தற்கொலை செய்ய முடிவு செய்து திடீரென்று விஷம் (பூச்சி கொல்லி மருந்தை) குடித்துள்ளார். இதுபற்றி அவர் யாரிடமும் கூறவில்லை. சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். அதன்பிறகே அவர் விஷம் குடித்தது ரங்கசாமிக்கு தெரியவந்தது.
இதையடுத்து காவ்யாவை உடனே குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரே சாம்பாரை 3 நாட்களாக பரிமாறிய விவகாரத்தில் கணவர் திட்டி தாக்கியதால் மனம் உடைந்து காவ்யா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் தற்கொலை செய்த காவ்யா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவ்யா தற்கொலை செய்ததால் அவரது 4 வயது குழந்தை பரிதவித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.