ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க மத சுதந்திர ஆணையம் கோரிக்கை: இந்தியா கடும் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அந்நாட்டின், ‘மத சுதந்திரத்துக்கான ஆணையம்’ அந்த அமைப்புக்கு அமெரிக்க அரசு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க மத சுதந்திர ஆணையம் கோரிக்கை: இந்தியா கடும் கண்டனம்
Published on

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வரும் 29-ம் தேதி நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்ல உள்ளார். இந்நிலையில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது அமெரிக்காவில் பொருளாதார தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.அவர்களின் கருத்துக்கள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பல துணை அமைப்புகளை கொண்டது. அந்த துணை அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. இப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளார். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் அமைப்பின் வன்முறைச் செயல்களிலிருந்து பகவத்தின் வருகையை தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது.எனவே ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உயர்மட்ட சந்திப்புகள் அல்லது ராஜதந்திர மரியாதைகள் மூலம் கவுரவம் அளிக்கப்படக் கூடாது. அதற்கு பதிலாக மத நம்பிக்கை சுதந்திரம் மீறல்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கண்டறியப்படும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது தடை விதிப்பதில் அமெரிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத சுதந்திர ஆணையம் ஒரு “பாரபட்சமான அமைப்பு; அதற்கு நம்பகத்தன்மை இல்லை” என்று இந்தியா விமர்சித்துள்ளது. இந்த அமைப்பு இந்தியாவின் மத சுதந்திர நிலை குறித்து தொடர்ந்து தவறான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை முன்வைத்து வருவதாகவும், அதன் மதிப்பீடுகள் சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள் மற்றும் குறிப்பிட்ட கருத்தியல் அணுகுமுறைகளை அடிப்படையாக கொண்டவை என்றும் இந்தியா ஏற்கனவே தெரிவித்திருந்தது

X

Daily Thanthi
www.dailythanthi.com