கடந்த 12 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் - பிரதமர் மோடி பெருமிதம்

சுயசார்பு இந்தியா எனும் தொலைநோக்கு பார்வையை நமக்கு வழங்கியது காந்திதான் என பிரதமர் மோடி கூறினார்.
இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் - பிரதமர் மோடி
Published on: 

புதுடெல்லி,

உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் போட்டியிடும் திறனை இந்திய நிறுவனங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் நூற்றாண்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லி பாரத் மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிவைத்து உரையாற்றியதாவது:

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம். இந்தியப் பொருளாதாரம் கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இளைஞர்கள், விவசாயிகள் உழைப்பால் நிலைமை மாறியுள்ளது.

13 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதற்கு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு அமைப்பே சாட்சி. நம் வாழ்க்கையில் நாம் முன்னேறிச் செல்ல தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். தன்னிறைவு பெற்ற நாடாக மாற ‘நாட்டுக்கே முன்னுரிமை' என்பதை தொழில் துறையினர் பின்பற்ற வேண்டும்.

சுயசார்பு இந்தியா

சுயசார்பு இந்தியா எனும் தொலைநோக்கு பார்வையை நமக்கு வழங்கியது காந்திதான். தனக்கு தேவையான பொருட்களை தானே தயாரிக்கும் சிந்தனையை காந்தி நமக்கு வழங்கினார். 1930இல் காந்தி விட்டுச் சென்ற அதே செய்தியை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நான் உங்களிடம் கூறுகிறேன்.

உலகின் மருந்தகமாக இந்தியா உள்ள நிலையில் பல கோடி ரூபாய் மருந்து பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம்.

இந்தியர்கள் தரமான பொருட்களைப் பெறுவதற்கு முழுத் தகுதியானவர்கள், உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் போட்டியிடும் திறனை இந்திய நிறுவனங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நட்புக்கு மதிப்பளிக்கத் தெரிந்த அரசு

இது முந்தைய அரசுகளைப் போன்ற அரசு அல்ல. இது நட்புக்கு மதிப்பளிக்கத் தெரிந்த அரசு. நீங்கள் என்னுடைய உண்மையான நண்பர்களாக இருந்தால், நாட்டில் இன்னும் என்னென்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தயங்காமல் எனக்குக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

நமது உள்நாட்டு சந்தைகள், சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வது, உலகத் தரத்துக்கு இணையான பொருட்களைத் தயாரிப்பது, சர்வதேச விநியோகக் கட்டமைப்புகளை உருவாக்குவது ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 7 சதவீதம்

1927-ம் ஆண்டு ஃபிக்கி அமைப்பு தொடங்கப்பட்டது. அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதேபோல், 2027-ம் ஆண்டில் ஃபிக்கி அமைப்பு தனது 100-வது ஆண்டைக் கொண்டாடும்போது, அடுத்த 20 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதம் என்பது வெறும் முழக்கம் அல்ல; அது நமது உறுதிப்பாடு.

தற்போது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சுமார் 50 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர ஏற்றுமதியாகும்.

50 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு

உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் 50 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

1970-களில் 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டபோது இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 50 கோடியாக இருந்தது. அப்போதே வறுமையை ஒழித்திருக்க முடியும். ஆனால் அன்றைய கொள்கைகளில் குறைபாடுகள் இருந்தன. சரியான நோக்கமும் இல்லை என்பதற்கு ஃபிக்கி அமைப்பே சாட்சியாக உள்ளது.

சரியான கொள்கைகளையும், உறுதியான நோக்கத்தையும் கொண்டு செயல்பட்டதன் விளைவாகவே கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் 50 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவின் தற்போதைய வளர்ச்சிப் பாதையும், முன்னேற்ற வேகமும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதையும், நாட்டின் வெற்றிக்கான உத்தரவாதத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் தொழில்துறையினருக்கும், தொழில்முனைவோருக்கும் மிக முக்கியப் பங்கு உள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

X