டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது

இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று அதன் மீது மோதியதில், விமானத்தின் என்ஜின் ஒன்று லேசாக அதிர்ந்தது.
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
Published on

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று இன்று காலை 8.42 மணியளவில் புறப்பட்டது.

அதில், பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 175 பேர் இருந்தனர். அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று அதன் மீது மோதியது. இதில், விமானத்தின் என்ஜின் ஒன்று லேசாக அதிர்ந்தது. இதனை தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, விமானம் பாட்னாவுக்கே திரும்பியது.

காலை 9.03 மணியளவில் ஓடுபாதை 7-ல் வந்திறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என பாட்னா விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

குஜராத் மாநிலம் சூரத் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து 6இ-784 என்ற எண் கொண்ட இண்டிகோ ஏர்பஸ் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு புறப்படுவதற்காக நேற்று மாலை தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகளின் பொருட்களை வைக்க கூடிய பகுதியில் இருந்த கதவின் மூலையில் தேனீக்கள் சூழ்ந்திருந்தன. இதனால், அது எந்த நேரமும் ஊழியர்களை தாக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தண்ணீரை பயன்படுத்தி தேனீக்களை அப்புறப்படுத்தினர்.

இதனால், ஏறக்குறைய ஒரு மணிநேரம் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மாலை 4.20-க்கு புறப்பட வேண்டிய விமானம் மாலை 5.26 வரை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சத்தீஷ்காரின் ராய்ப்பூருக்கு நேற்று காலை 6.35 மணிக்கு 51 பயணிகளுடன் 6இ-7295 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதற்கான அலாரம் அடித்தது. இதனால், விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கடந்த 2 நாட்களில் இதுபோன்ற இடர்பாடுகளால் இண்டிகோ விமான நிறுவனத்தின் 3 விமானங்கள் சிக்கி அதன் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com