

புதுடெல்லி,
பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரின் உண்மையான தொழில், அரசியல் அல்ல. பொதுமக்களின் நிலத்தை அபகரிப்பதுதான்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டம் கிச்சா பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க ராபர்ட் வதேராவின் சகோதரி சாய்ரா வதேரா முயன்று வருகிறார். அந்த நிலம், மறைந்த குல்சும் கான் என்ற பெண் பெயரில் உள்ளது. தற்போது. அவருடைய 90 வயது சகோதரி நஸ்ரின் கான் அனுபவத்தில் இருக்கிறது.
கிச்சா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திலக்ராஜ் பெஹர், 100 ஆதரவாளர்களுடன் இரவு நேரத்தில் அங்கு சென்று. இடத்தை காலி செய்யுமாறு நஸ்ரின் கானை மிரட்டி உள்ளார். காலி செய்யாவிட்டால், கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டவழிமுறைகள் தோற்று விட்டதால், மிரட்டல் வழிமுறையை பின்பற்றுகின்றனர். இப்பிரச்சினையில், சாய்ரா வதேரா ஒரு முகமூடி மட்டுமே. அவருக்கு பின்னணியில் பிரியங்காவும், அவரது கணவரும் உள்ளனர்.
நஸ்ரின் கானே கூறிய குற்றச்சாட்டின்பேரில் இதை கூறுகிறேன். வதேரா குடும்பத்திடம் நிலத்தை ஒப்படைப்பதற்காக காங்கிரசார் இந்த வேலையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார்.
பிரியங்காதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தொலைபேசியில் அழைத்து, தனது மைத்துனிக்கு அந்த நிலம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ளார். இச்சம்பவம். 'பிரியங்கா-வதேரா மாடல்' நில அபகரிப்பை பிரதிபலிக்கிறது.
முஸ்லிம்கள் மற்றும் ஏழைகள் பக்கம் நிற்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், 90 வயது முஸ்லிம் மூதாட்டியை மிரட்டி உள்ளனர். ஒரு நிலத்தின் மீது அந்த குடும்பம் கண்வைத்து விட்டால், நிலத்தை காலி செய்யும்வரை அதில் வசிப்பவர்களை மிரட்ட ஆள் அனுப்புவார்கள் என்றார்.