குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி - ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் எந்தவித பேரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்று உமர் அப்துல்லா கூறினார்.
உமர் அப்துல்லா
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் நோக்கில், தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை பணம், அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவதாக பாஜக தரப்பில் பேரம் பேசப்படுவதாக முதலமைச்சர் உமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் பகுதியில் நடைபெற்ற கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய உமர் அப்துல்லா பேசியதாவது;- தேசிய மாநாட்டுக் கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் தன்னிடம் ஆதரவு கோரி அணுகியதாகவும், அதற்குப் பதிலாக ரூ.20 முதல் ரூ.30 கோடி வரை பணம், அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்ததாகவும் ஜம்முவை சேர்ந்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் எங்களிடம் கூறினார். மக்களின் நம்பிக்கையை பணம் மற்றும் பதவியால் வாங்க முடியும் என்று சிலர் கருதுகிறார்கள் அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் தற்போது மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவதாகக் கூறி தங்கள் எம்எல்ஏக்களை ரகசியமாக அணுகி வருகிறார்கள்.

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் எந்தவித பேரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். ரூ.30 கோடி மட்டுமல்ல ரூ.100 கோடி கொடுத்தாலும் தங்கள் நேர்மையை விற்க மாட்டார்கள் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள்” என்றார். மேலும், பின்வாசல் அரசியலின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று நினைப்பவர்கள் தவறாகக் கணக்கிடுகின்றனர் என்றும், மக்களின் ஆதரவின்றி முன்வரிசை அதிகாரத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்தார். மக்கள் யாரை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் அங்கேயே நீடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com