கேரளத்தில் சிறையில் பதவிப்பிரமாணம் எடுத்த பா.ஜ.க. கவுன்சிலர்

உள்ளூர் இந்து தெய்வங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.

கேரளத்தில் சிறையில் பதவிப்பிரமாணம் எடுத்த பா.ஜ.க. கவுன்சிலர்
Published on

திருவனந்தபுரம்

கேரளத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் சிறையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

கேரளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது. எனினும், அக்கட்சியை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் பதவியேற்றது செல்லாது என்றும், அவர்கள் மீண்டும் பதவியேற்பு உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த கவுன்சிலர்களில் ஒருவர் சுகதன். கொலை முயற்சி உள்பட 2 குற்றவியல் வழக்குகளில் சிக்கிய அவர் ஜாமீன் பெற்ற போதிலும், கேரள அரசு அவரை தடுப்புக்காவலில் வியுர் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

சிறையில் பதவிப்பிரமாணம்

கேரள சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள அவர், சிறையிலேயே பதவிப்பிரமாணம் எடுத்து கொள்ள கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இந்நிலையில், திருவனந்தபுரம் மேயர் ராஜேஷ், சிறையில் உள்ள நூலகத்தில் சுகதனுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேரளத்தில் இது போல் நடப்பது இதுவே முதல்முறை ஆகும்.

அப்போது அவர், மாநகராட்சி மற்றும் சிறை அதிகாரிகள் முன்னிலையில், கடவுளின் பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார்.

ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த டிசம்பரில் கவுன்சிலர்கள், விதிகளின்படி, கடவுள் பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்து கொள்வதற்கு பதிலாக, உள்ளூர் இந்து தெய்வங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டனர். இது சர்ச்சையானது. இதனை தொடர்ந்தே ஐகோர்ட்டு அவர்களின் பதவிப்பிரமாணம் செல்லாது என்றும் அவர்கள் மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com