அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்


அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்
x

பாஜகவினர் போராட்டத்தால் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 150 நாட்கள் திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், டெல்லியின் முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, முதல்-மந்திரியாக இருந்தபோது கெஜ்ரிவாலுக்கு அரசு ஒதுக்கிய பங்களா வீட்டை காலி செய்து புதிய வீட்டிற்கு குடியேறினார்.

இந்த நிலையில், அரசு பங்களாவில் கெஜ்ரிவால் தங்கியிருந்தபோது பங்களாவை சீரமைப்பதற்காக ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப்பட்டதாகவும். இதற்கு பொதுப்பணித்துறை உரியக் கணக்கு வழங்கப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதனை கண்டித்து, கெஜ்ரிவால் தற்போது தங்கியுள்ள வீட்டின் முன்பு பாஜக எம்பிக்கள், பாஜக கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்ரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த டெல்லி முன்னாள் மந்திரி கைலாஷ் கெலாட்டும் கலந்துகொண்டார். இதனால் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story