மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை முழுவதும் உள்ள 50 மருத்துவமனைகளுக்கும், மும்பையில் உள்ள இந்துஜா வர்த்தக கல்லூரிக்கும் இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

மும்பை,

மராட்டியத்தின் மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மிரட்டல் விடுத்து இ-மெயில் ஒன்று வந்துள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், தலைமையகம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மர்ம நபர் மிரட்டல் செய்தியை விடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

உடனடியாக மும்பை போலீசார் அந்த பகுதிக்கு சென்று, அதனை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின் தீவிர சோதனை செய்ததில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை, பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 41 விமான நிலையங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. எனினும், தீவிர சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

இந்த நிலையில், மும்பை முழுவதும் உள்ள 50 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதன்படி, ஜஸ்லோக் மருத்துவமனை, ரகேஜா மருத்துவமனை, செவன் ஹில்ஸ் மருத்துவமனை, கோகினூர் மருத்துவமனை, கே.இ.எம். மருத்துவமனை, ஜே.ஜே. மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதனை மும்பை போலீசார் உறுதிப்படுத்தினர். வி.பி.என். நெட்வொர்க்கை பயன்படுத்தி இ-மெயில்கள் அனுப்பப்பட்டு உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மும்பையில் உள்ள இந்துஜா வர்த்தக கல்லூரிக்கும் இ-மெயில் ஒன்று நேற்று இரவு வந்தது. அதில், கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, உள்ளூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். எனினும், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com