

மும்பை,
மதம் மாற சொல்லி வற்புறுத்துவது மத நம்பிக்கையை அவமதிப்பது ஆகாது என்று கூறிய ஐகோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மராட்டிய மாநிலம், அமராவதியை சேர்ந்த ஜோசப் குடாவந்த், அவரது மகன் விக்டர் குடாவந்த், மருமகள் எல்வினா குடாவந்த் மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்த் மங்கர் ஆகியோர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியை மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் தங்கள் மீதான வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சந்த்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசுத்தரப்பு வக்கீல், "இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற ஒப்புக்கொண்டால், புகார்தாரருக்கும் அவரது மனைவிக்கும் மாதந்தோறும் பணம் வழங்குவதாகவும், குழந்தைகளின் கல்விச்செலவுகளை ஏற்பதாகவும், அவர்களுக்கு வீடு கட்டித்தரு வதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மத உணர்வை புண்படுத்தி உள்ளனர்" என்று வாதிட்டார்.
ஆனால் இந்தியாவின் எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் தீய நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், எந்த மதத்தையும் தாங்கள் அவமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் வழக்குகளில் இருந்து விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், "இந்த வழக்கில் அதிகபட்சமாக, புகார்தாரரையும், அவரது மனைவியையும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் வற்புறுத்தினார்கள் என்பது மட்டுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் மத நம்பிக்கைகளை அவர்கள் புண்படுத்தவில்லை. ஒருவரை மதமாற்றம் செய்ய வலியுறுத்துவது எந்தவொரு பிரிவினரின் மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஆகாது" என்று குறிப்பிட்டார்.
மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வதை தடை செய்வதற்கும் மராட்டிய அரசு கொண்டு வந்த சட்டம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதியில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.