

மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானே கோரேகாவ் விலேஜ் பகுதியை சேர்ந்தவர் முத்தாசிர். இவரது மகன் இபாதத்(வயது9). இவன் நேற்று முன்தினம் தனது வீட்டருகே உள்ள பள்ளி வாசலுக்கு மாலை நேர தொழுகைக்காக சென்றான். ஆனால் வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை.
இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினர். அப்போது சிறுவன் இபாதத்தின் தந்தை முத்தாசிருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.23 லட்சம் பணம் தரவில்லையெனில் சிறுவனை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுவன் இபாதத், கோரேகாவ் விலேஜ் பகுதியில் உள்ள வீட்டில் சாக்குப்பையில் பிணமாக மீட்கப்பட்டான்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சல்மான் என்ற டெய்லர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சல்மானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் சிறுவனை கடத்தி ரூ.23 லட்சம் பணம் கேட்டதாக தெரியவந்துள்ளது. அவர் எப்படி சிறுவனை கடத்தி சென்று கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.