'உஜ்வாலா' திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் ‘உஜ்வாலா’ திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும்.

இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

ரூ.1,650 கோடி விடுவிப்பு

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

'உஜ்வாலா' திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டுகளில், கூடுதலாக 75 லட்சம் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடியை விடுவிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்துடன் சேர்த்து, 'உஜ்வாலா' திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியே 35 லட்சமாக உயரும்.

பிரதமருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றம்

ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் தீர்மானம், மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கொண்டு வந்தார்.

ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமையானது. பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் மீது கருத்தொற்றுமை ஏற்பட்டது. இது, பிரதமர் மோடியின் திறமையான தலைமைப்பண்புக்கு ஒரு அடையாளம். இதை உலகமே பேசுகிறது.

தலைவர்கள் பிரகடனம் ஒருமனதாக ஏற்கப்பட்டது, சர்வதேச நிகழ்வுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதை நிரூபித்துள்ளது. பொருளாதார பெருவழிப்பாதை திட்டம் வரவேற்புக்குரியது.

இ-கோர்ட்டு திட்டம்

'அனைவருக்கும் வளர்ச்சி' என்ற பிரதமரின் கொள்கைப்படி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களுக்கு நீதி பெற்று தருவதற்காக இ-கோர்ட்டு திட்டம் தொடங்கப்பட்டது.

அதன் 2-வது கட்டம் முடிந்தநிலையில், 3-வது கட்டத்தை தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. 3-வது கட்ட பணிகள், 4 ஆண்டுகள் அமலில் இருக்கும். இதற்கு ரூ.7 ஆயிரத்து 210 கோடி ஒதுக்கப்படுகிறது.

3-வது கட்டத்தில், கோர்ட்டு ஆவணங்கள் முழுமையாக டிஜிட்டல்மயமாக்கல், வழக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்யும் 'இ-பைலிங்', ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

அன்னிய முதலீடு

சுவன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தில் சைப்ரஸ் நாட்டை சேர்ந்த பேரியண்டா லிமிடெட் நிறுவனம் ரூ.9 ஆயிரத்து 589 கோடி அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் சுவன் நிறுவனத்தின் 76.1 சதவீத பங்குகள் பேரியண்டா நிறுவனத்துக்கு அளிக்கப்படும். இதையடுத்து, சுவன் நிறுவனத்தில் அன்னிய முதலீடு, 90.1 சதவீதமாக உயரும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com