நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்

நீட் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சர்ச்சைகளை நாடு முழுவதும் எழுப்பியது.

தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் தேர்வு நடந்தபோதே எழுந்தன. அது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்த நிலையில், ஜூன் 4ம்தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகி இருந்தன.

குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர். இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேரமிழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது. இதுவும் பல மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்தன. மறுபுறம் இந்த மோசடிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த அதில் கோரப்பட்டு இருந்தன.

இந்த முறைகேடு விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 1563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்வதாக கோர்ட்டில் அரசு தெரிவித்தது. மேலும் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி கடந்த மாதம் 23ம்தேதி அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 1ம்தேதி வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் புதிய தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப்பட்ட பட்டியலின்படி முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 61ஆக குறைந்தது.

முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை மத்திய அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன்படி பல்வேறு வழக்குகள் பதிவு செய்த அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சோதனை, கைது என அடுத்தடுத்து நடவடிக்கைகள் வேகமெடுத்தது. குறிப்பாக ஜார்கண்ட், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமானோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்பதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீட் விவகாரமே நாடு முழுவதும் பேசுபொருளானது. மத்திய அரசையும், தேசிய தேர்வு முகமையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.

இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களும் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மாணவர்களுக்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்து இருந்தது. நீட் தேர்வை ரத்து செய்வது அறிவுப்பூர்வமாக இருக்காது என சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு தெரிவித்தது.

இவ்வாறு நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள 30-க்கு மேற்பட்ட வழக்குகள் கடந்த 8-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

விசாரணை தொடங்கியதுமே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவர், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, விடைத்தாள் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் அதிகமாக நடந்துள்ளதால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், தேர்வை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டனர்.

அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை கடந்த 11ம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் அதற்குமுன் இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இரண்டாவது விசாரணையை தொடர முடியாததால், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ.யின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை" என்று முறையிட்டார்.

அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "நான் எப்போதுமே வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சி.பி.ஐ.யின் அறிக்கை பகிரப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி விடுவார்கள். நீட் கசிவு திட்டமிட்ட ரீதியில் நடந்துள்ளது என்றும், அது முழு தேர்வையும் பாதித்தது என்றும் கூறும் மனுதாரர்கள், அதனை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும். ஆழமான விசாரணை தேவைப்படும் பிரச்சினைகள் எவை என்பதையும் சுட்டிக்காட்டுங்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.

அதற்குப் பதில் அளித்த மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், " 100மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை முதல் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மாணவர்களின் முடிவுகளை வெளியிட வேண்டும். இளநிலை நீட் இடங்கள் 1.08 லட்சம் உள்ளன. நீட் தேர்வு எழுதியவர்களில் 1.08 லட்சம் வேட்பாளர்களுக்கு இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 22 லட்சம் மாணவர்களுக்கு சீட் கிடைக்காது. எனவே, மறுதேர்வு 1.08 லட்சத்தை மட்டுமே பாதிக்கிறது. எனவே, மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அவர் வாதிட்டார்.

அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட், "முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்" என்று அவர் கூறினார். அதற்கு மூத்த வழக்கறிஞர் ஹூடா, "முறைகேட்டில் ஈடுபட்டவர்களை, ஈடுபடாதவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தேசிய தேர்வு முகமையிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். அதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, "ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்குள் இல்லாத 131 மாணவர்கள் மறுதேர்வை விரும்புகிறார்கள். ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்குள் இருக்கும் 254 மாணவர்கள் மறுதேர்வை எதிர்க்கின்றனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்குள் இருக்கும் சிலர், அரசாங்க இடங்களை பெற விரும்புவதால் நீதிமன்றத்தின் முன் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com