

நகரி,
தெலுங்கானா மாநிலம் வனப்பர்த்தி மாவட்டம் கஞ்சிராவ் பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ் ரெட்டி (வயது 33). இவருக்கும் தாட்டிபாமுலா கிராமத்தை சேர்ந்த நந்தினி (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் காரில் யாதகிரி குட்டா கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அட்டாகுல பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த நந்தினியும், 4 மாத மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரை ஓட்டிச்சென்ற பிரகாஷ் ரெட்டி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவரை வனப்பர்த்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இந்த விபத்து குறித்து அட்டாகுல சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் தகவல் தெரிவித்தார்.