கார் இறக்குமதி மோசடி: நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு

சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கார் இறக்குமதி மோசடி: நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு
Published on

திருவனந்தபுரம்,

பூடான் நாட்டில் உயர் ரக வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி, அதனை இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் பிரபலங்களுக்கும் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மத்திய அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டதாக கூறி சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் களமிறங்கினர்.

இந்த கார்கள் விற்பனையில், மலையாள முன்னணி நடிகர்களான பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் (மம்முட்டியின் மகன்) ஆகியோரது பெயர்களும் அடிபட்டது. இதையடுத்து கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள இருவரது வீடுகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இருவரது அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள், நண்பர்கள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இந்தநிலையில் மலையாள நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட மொத்தம் 17 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர்கள் மம்முட்டி, துல்கர் சல்மானின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடைபெற்றது. அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் துல்கர் சல்மான்,  பிரித்வி ராஜ், அமித் சகலக்கல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.கார் இறக்குமதி மோசடியில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சிக்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com