

புதுடெல்லி,
புதுடெல்லியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விழுந்ததில் ராணுவ அதிகாரியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொல்கத்தாவில் பணியாற்றி வரும் ராணுவ அதிகாரியின் மகன் யஷ்வேந்திரா (வயது 20). இவர் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 6 மணியளவில் தனது தோழியின் காரை யஷ்வேந்திரா, டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள நாங்கல் தேவாட் சிக்னல் அருகே ஓட்டிச் சென்றார்.
அங்குள்ள ஒரு பயங்கரமான வளைவில் திரும்ப முயன்றார். அப்போது, மழை மற்றும் கழிவுநீர் காரணமாக வழுக்கலாக இருந்த சாலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று அங்கிருந்த மரத்தில் மோதி, அருகில் இருந்த திறந்தவெளி சாக்கடை கால்வாய்க்குள் தலைகீழாக கவிழ்ந்தது.
விபத்தின் போது காரின் கதவை திறந்து கொண்டு அவரது தோழி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், காரின் மேற்கூரை இடிந்து உள்ளே சிக்கிக்கொண்ட யஷ்வேந்திரா பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வசந்த் குஞ்ச் சவுத் போலீசார், ஜேசிபி இயந்திரம் மூலம் காரை மீட்டு அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஏரோசிட்டி பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுநீர் சட்டவிரோதமாக இந்தச் சாலையில் கொட்டப்படுவதால் சாலை எப்போதும் வழுக்கலாக இருப்பதாகவும் , ஆபத்தான அந்தப் பெரிய கால்வாய்க்கு எவ்வித மூடியோ அல்லது தடுப்புச் சுவரோ அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.